வெள்ளி, டிசம்பர் 26

ரஜினி நடிக்கிறாரா?........................................



இன்றைய தினகரன் மற்றும்  டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் ரஜினிகாந்தின் மனைவி லதா -  மீடியாஒன் குளோபல் எண்டர்டைன்மெண்ட் லிட் என்னும் நிறுவனத்திற்காக வாங்கிய கடன் ரூ.22,21,85,865 திருப்பிச் செலுத்தவில்லை என அடமான சொத்தான திருமுடிவாக்கத்திலுள்ள 213 செண்ட் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது எக்ஸிம் பேங்க் ஆப் இந்தியா.

அடுத்தவர்கள் பணத்தில் நடிப்பதுதான் அவர் வேலை.  ஆனால் தன் மகளுக்காக ஒரு படம் எடுத்து இப்போது கடனில்.  அவரிடம் பணம் இல்லை.  ஏன் கடன் வாங்கி படம் எடுக்கிறார்.

ஒருபடத்தில் நடித்தால் ரூ.60 கோடி என்கிறார்கள். கணக்கில் இல்லாமல் எத்தனை கோடிகள்.

இப்போது லிங்கா திரைப்படம் வெளியிட்ட திரைப்பட அரங்க உரிமையாளர்கள், ரூ.40 கோடி திருப்பி கொடு என்கிறார்கள்.

ஏன்?

ரஜினி விலைபோகாத சராக்காகி விட்டாரா?

யாரும் இல்லாத அளவு 3000 முதல் 5000 பிரிண்டுகள் இவர் படத்திற்கு மட்டும்தானே பிறகு ஏன் இந்த நட்டக் கணக்கு

10 நாட்கள் 2 அல்லது 3 காட்சிகள் ஓடினால் எத்தனை கோடி திரளும்.  சந்தை கணக்கு மாறிவிட்டது.  முன்பு மாதிரி 100 நாட்கள் என்பதெல்லாம் கனவுதான்.  ஆனால் 10 நாட்கள் கூட ஓடாதென்றால்.............

ஏன் ரூ.200 கோடிக்கு காப்பீடு செய்கின்றார்கள்.  அப்போதுதான் வெளிநாட்டு உரிமையை விற்க முடியும்.  தமிழகத்தில் இந்தியாவில் வெளியிடுவதற்கு முன் வெளிநாட்டில் விற்கப்பட்டுவிடுகிறது. 

அங்கிருந்தே விடியோ சிடி வெளியாகிவிடுகிறது.  ஆயினும்

தியேட்டருக்கு வரும் கூட்டம். அது அப்படியேதான் உள்ளது. ஆயிரம் இரண்டாயிருந்திற்கு சீட்டு வாங்கும் கூட்டம் அதுவும் அப்படியேதான் உள்ளது.

அப்புறம் என்ன

எக்கனாமி ரொம்ப டவுண்

ஆமா இது மோடி ஆட்சியல்லவா

திங்கள், டிசம்பர் 15

திங்கள், நவம்பர் 24

ஒரு சொல் கூறு


தத்தையே
தனித்திருக்கும் எந்தன்
பிணி நீக்கும் – ஒரு
சொல் கூறு

பஞ்சவர்ண கிளியே
பலசொல் அறிவாய்
பாவையான் மகிழ – ஒரு
சொல் கூறு

அன்னம் இணையோடு
என்ன பெருமிதம் பார்
எனினும் தத்தையே– ஒரு
சொல் கூறு

அலைபேசியோ
தொலைபேசியோ
அடியவள் வேண்டுவது
ஒரு சொல்

“ஸ்கைப்” பில்
“லைப்பை” ஓட்டும்
“வைப்” யான் வேண்டுவது
ஒரு சொல்

ஆற்றங் கரையில்
பெண்மான் துயில – ஆண்
கண்விழித்து காவலிருக்கு
அதனால் யான் வேண்டுவது

“வருவார்” இன்று
அருகிருப்பார் என
உவகை யூட்டும் – ஒரு
சொல் கூறு

வியாழன், அக்டோபர் 23

தருமி: 794. தமிழ்மணம் மாறுமா ... மாற்றுவோமா?

தருமி: 794. தமிழ்மணம் மாறுமா ... மாற்றுவோமா?: பல முறை தொடர்ந்து எழுதியும் இது வரை தமிழ்மண பொறுப்பாளர்கள் எந்த வித எதிர்வினையும் செய்யவில்லை. ஒரு அடிப்படை நாகரீகம் கருதியாவது ஏதாவது ஒரு பதிலோ, பதிவோ கொடுத்திருக்கலாம். அந்த அளவு basic courtesy கூட காண்பிக்காமல்  பதிவர்களுக்கு அவர்கள் கொடுக்கும் ‘மரியாதைக்கு’  மிக்க நன்றி. அந்த அளவில் தான் நமது உறவும் இருந்து வந்திருக்கிறது என்பது மிகவும் வருத்தத்திற்குரிய

செவ்வாய், அக்டோபர் 21

ஆங்கிலம்



அறிவா அற்புதமா
     அறிவியலா அஞ்ஞானமா
புரியாச் சொற்பதமா
        புரியயவைச்  சாதகமா
தெரியா மொழிகள்
     தேவையாச் சுமையா
சராசரிக்குச் சரியாகுமா
     சாப்பாட்டின் பொருளாகுமா


றாயிரம் மொழியில்
    ஆண்ட மொழியானதால்
தராதரம் வந்ததா
        தமிழும் தாழ்ந்ததா
திராவிட வேராய்
      திகழும் தமிழ்மொழி
பரவட்டும் திக்கெட்டும்
        பழகிடுவோம் செம்மொழி

மொழியொரு வழியே
     மானுடத் தொடர்புக்கு
மொழியா யாவும்
     மூடிவைத்தப் பாலாகும்
இழிவா உயர்வா
      இதுவென் மொழியென்றிட
தெளிவாய்ப் பகர்வாய்த்
     தேன்தமிழ் நம்மொழியென

சிந்தனை மொழிக்கல்ல
        சீர்தூக்கி ஆயும் மனிதனுக்கே
நிந்தனை வழியல்ல
        நினது மொழியும் வாழட்டுமே
நந்தனை எரித்து‘
     நாயன்மா ராக்க வேண்டாமே
நம்தமிழை வளர்க்க
     நாமொன்றும் நாண வேண்டாமே

கண்மூடித் தாய்தமிழில்
     கண்டதும் இல்லையெனத் தூற்றாமல்
கண்டுபிடிக் கல்வியறிவில்
     காணும் பொருளின் சொற்பொருள்
சென்றுபடி மேலதேயம்
     சிறப்பான எதையும் கற்றுவா
கற்கண்டுத் தமிழ்மொழியில்
     கற்றதைப் பரப்பு வெற்றிபார்
     
அம்மொழியில் பேசிடவே
     ஆனந்தமா அல்ல பெருமையா
செம்மொழித், தமிழுனுக்கு
     சேந்தேள் விஷமா கூறுமைய்யா
பன்மொழி
 புலமை
     பண்படுத்த வேண்டுமே உன்னை
என்மொழிப் பெருமை
     எவரும் பேசிடவேப் பெருகுமே

ஆங்கிலமொரு மொழிதான்
    அதுபோலவே கிரேக்கமும் சீனமும்
இங்கிதமாய்க்
 கூறாதே
    இகலோகம் சுற்றிட உதவாதென
எங்கெல்லாம் போவாய்
     எதற்காய்ப் போவாயென சொல்லிடேன்
அங்கெல்லாம் நீபேசும்
     ஆங்கில  அழகைப் பார்த்திடுவேன்

புதன், அக்டோபர் 8

ஊடல்





வேல்விழியால் வேதனை
   வேண்டா என்பதா வேலவனை
வீண்பழியால் சோதனை
   விண்ணப்பமே மன்னிப்பாயா காவலனை
இல்வாழ்வில் ஊடலே
   ஏனிந்த தண்டனை ஏந்திழையே
ஏனென்று கேட்டாலே
   என்மனம் ஆறுமே மாறுமே

மெளனமா உனதுமொழி
    மடைதிறந்த மார்கழி சங்கீதமே
பௌதிக பார்வைதானே
   பாவையுனை பற்றிட வைத்தது
கெளதமனா ஆசைதுறந்து
   காசிராமே ஸ்வரம் சென்றிட
ரௌத்திரம் வேண்டாமடி
   ராசியாகி ராஜசுகம் தேடுவோமடி

செவ்வாய், அக்டோபர் 7

இதழின் கேள்வி



பற்றி இழுத்திட
  பாவையிதழ் பணித்திட
கற்றிடக் காமம்
 கலையெனத் தொடர்ந்திட
பெற்றச் சுகமோ
  போதையா மயங்கிட
வற்றா ஆசையோ
   வாழ்வைச் சுகமாக்கிட

முல்லை இதழாள்
  மூச்சடக்க முடியாது
எல்லை இதுவென
  இவனிடம் சொல்லிட
சொல்லை மதித்து
   சும்மா இருந்திட
"கல்லா"  மாமனே
  கருத்தாய் கேட்கிறாள்

திங்கள், அக்டோபர் 6

அச்சம் தவிர்


நாளொருமேனி
பொழுதொரு வண்ணம்
போராட்டம் தொடர

ஏனென்றோ
எதற்கென்றோ – எவரும்
கேட்பாரில்லை

இதுவொரு வழிகாட்டியென
இருக்கும் கட்சிகள்
ஏதும் சொல்லையோ

எரியும் கொள்ளியில்
நல்ல கொள்ளி தேடும்
ஏமாந்த மக்களே

தனியார்மயம்
தாராளமயம் – தந்த
அச்சத்தை பாருங்களேன்

தனியார் பேரூந்துகள் ஓடவில்லை
தனியார் பள்ளிகள் இயங்காதாம் – இவை
பயத்தில் நடக்கிறதோ

வணிகர் கடையடைப்பு
வரத்தை எதிர்பார்த்தா
வரும் கும்பலுக்கு பயந்தா

திரையுலக விரதம்
திரண்ட சொத்தை காக்கவா
தனித்து விடப்படும் அச்சத்திற்கா

பத்திரிக்கையாளர் விரதம்
கொடுக்கும் விளம்பரத்திற்கா
கோபக்கணையில் தப்புவதற்கா

காவேரி தாயை
கர்நாடகத்தில் சிறைவைத்தது
காலத்தின் கோலமா?

கோடநாடே
கர்நாடக சிறையென
நீதி சொல்ல

பிரதிவாதியோ
நீதிக்கு தண்டணையா
நீயெனக்கு சரிசமமா என்கிறான்

உண்ணாவிரத போராட்டம்,
மனித சங்கிலி போராட்டம்,
ஆலயங்களில் கூட்டு பிரார்த்தனை

வேள்வி யாகம் நடத்துதல்,
பால்குடம் எடுத்து வழிபடுதல்,
அங்கபிரதட்சனம் செய்தல்

மொட்டையடித்தும்
முட்டி போட்டும்
கோயில்களில் நேர்த்தி கடன்கள்

உச்சநீதிமன்றமே
உத்தமியை விடுதலை செய்யென
உதார்கள் (பேனர்கள்)

இத்தனையும் எதற்கு
இன்னும் கொள்ளையடிக்கவா
ஏமாந்தவன் தமிழனென்று சொல்லவா

அச்சம் தவிர்
ஆண்மை தவறேல் என்றவன்
ரௌத்திரமும் பழகு என்றிருக்கிறான்

திங்கள், செப்டம்பர் 15

சிவன் சொத்து குலநாசம்



நூற்றிருபந்தைந்து பேருக்கு
இட்ட சாபம்
குலநாசம்

செந்தில் வேலவன் பெயரில்
செய்திதாளில் விளம்பரம்
சிவனின் மைந்தனாயிருக்கலாம்

அக்னி செரூபமான
அண்ணாமலையாரை
அவர்கள் ஏமாற்றினார்களாம்

பிள்ளையின் தலையை கொய்தவன்
பக்த பிள்ளைகள் – உங்களை
மொய் எழுத சொல்கிறான்

தாயும் சேயுமானாலும்
வாயும் வயிறும் வேறுதானே – அதனால்
வாய்தா கொடுத்திருக்கிறான்

ஆறுகால உணவின்றி
அவனை வாடவிட்டால்
ஆறு’கால’ செய்திவரும்

மெய்யான உலகில்
மெய்யான உங்களை
மொய் எழுதி வாழச் சொல்கிறான்

பிட்டுக்கு மண் சுமந்தவனை
பிள்ளைகள் ஏமாற்றலாமோ?
பிடி சாபமென்கிறான்

சாபத்திற்கு
சன்மானம் அளித்தால்
சாப விமோசனம்

எட்டாயிரத்திற்கும்
இரண்டு கோடிக்கும்
சமத்துவமாய் சாபம்

முக்கண் நாயகனே
உமக்கு பட்டா அளித்த
வட்டாச்சியர் யார்?

உமக்கு முன்
உரிமை கொண்டாடிய
பட்டாதாரர் யார்?

ஆதியும் அந்தமுமில்லா
ஆறுமுகனின் தகப்பனே – உரூரின்
ஆதிதான் யாதோ?

பட்டா மாற்ற – நான்
பட்டபாடு – நீயும்
பட்டாயோ?

காஞ்சி காமாட்சி
மதுரை மீனாட்சி
மயிலை கபாலியோடு

மூவடியில் உலகலந்தவனுக்கும்
பூவுலகில் நிலமெதற்கு
கோடிகளில் புரள்வதற்கா?

ஆண்டையா? ஆண்டவனா? – அல்ல
அடுத்தவன் உழைப்பில் வாழும்
தஞ்சாவூர் மிராசா?

ருத்ரபூமி பொறம்போக்கு
மாத்திரமே – உனது
சொத்தென் றிருந்தேன்

சுடலையை விட்டு
சுற்றி சுற்றி – வளைத்த
சொத்தின் விபரம் இதுதானோ

தலையாறு கொண்டவனுக்கும்
தலையை கொய்தவனுக்கும்
எல்லையில்லா சொத்திருப்பதால்

அவ்வை பள்ளி – உன்
பிள்ளைக்கு பிடிக்குமென
நடத்துகிறோம்

அதற்கு கோடிகளில்
பங்கு கேட்பதா?
சங்கரனே உமது குலமென்ன?





செவ்வாய், ஆகஸ்ட் 12

ஒரு வாரக் கொண்டாட்டம்



இறந்தவனுக்கு திவசம்
இரத்த சம்பந்தக்காரன்
ஒருநாள் செய்வான்

முடியாட்சி மன்னனெனில்
குடிமக்கள் அனைவரும்
கூடி அழுவர்

இன்றுதான் இறந்தான்
என்றிருந்தாலோ
ஏழுநாள் துஷ்டிக்கலாம்

பாட்டன் காலத்தில்
பாடையில் சென்றவனை - இன்று
சுடலையில் தூக்கி நிறுத்தலாமா

கருவறை தன்னில்
கல்லறை ஆனதை
கடபாரையால் எழுப்பலாமா

மறைந்திருந்து கொன்றான்
மாரீச மாயமான் என்றறியா
அயோதிராமன் – வாலியை

சுற்றறிக்கை அனுப்பியே
சுத்திரனையும் சமமாக்கி
சமஸ்கிருதம் படியென்கிறான்

திரேதா யுகமோ
கலியுகமோ – சமஸ்கிருதம்
உனக்கு புரியுமோ?!

நந்தனுக்கு திறக்கா வாயிலும்
தமிழுக்கு கிடைக்கா சிற்றம்பலமும்
ஒருவாரத்தில் கிடைக்க வைப்போமோ?

மூத்த தமிழ் காத்திடவே
மூக்கறுப்போம்
ஸ்ரீதேவி ஆனாலும்




புதன், ஆகஸ்ட் 6

“மிஸ்டு கால்”


நீயோ நானோ
நினைவுகளில் வாழ்பவர்கள் – ஆம்
நினைக்காத நாளில்லை

மறவா
மறந்தாய் – எனவெழுதும்
மடலல்ல இது

உறவா
உருகிடுவேன்
உனதருகாமையில்

சிறகோ – இச்
சிறியவளுக்கில்லை
சிந்தனை மட்டுமே

நாளும்
அழைப்பாய் – பல
கதை கதைப்பாய்

அழைக்க மறந்தாயென
அறிவிப்பில்லை – இதுவென்
அகமகிழ்ச்சிக்கொரு கோரிக்கை

உழைப்பின் வேகத்தில்
உன்னையே மறப்பவன் நீ
ஒருநொடி எனை நினைத்திட

கைப்பேசியில்
எனக்கான அழைப்பை
தவற விடு

வாய்பேசிட நினைத்ததை
கைபேசியின் பாடல்
காற்றாய் ஒலித்திடும்

காலமும் கனவும்
கரைந்திடும்
உன் நினைவில்




ஞாயிறு, ஜூன் 22

திருமணமாம் திருமணமாம்



கந்தர்வ மணத்தில்
கவர்ந்த இணையின் – கை 
கோர்த்துக் கொள்ளுதல்

பொன்னும் பொருளும்
புகையும் மந்திரமும்
கன்னிகா தானத்தில்

எண்ணும் எழுத்தும்
கண்ணே நீதானென – உறுதி
ஏற்பதொரு சீர்திருத்ததில்

ஊட்டி வளர்த்தவள்
உறுதிமொழி கூறிட – மன்றல்
நடப்பதொரு சமூகத்தில்

மாலை மட்டுமே மாற்றி
தாலியை மறுத்து
இணைவது தன்மானத்தில்

நட்பில் நால்வர்
நல்லதொரு சாட்சியாக – இணைவது
பதிவு மணத்தில்

தேகமிணைய - நேரம்
தோஷமில்லையென
இணைந்தது ராகுகாலத்தில்

இணையாய் சேர்ந்திருப்போம்
இனிதாய் இருக்கும்வரை
இன்றைய தினத்தில்
  
கூட்டத்திற்கு ஒருவழியென
கூறிடுவர் பலவழி – ஆயினும்
கூடுதலே குறி என்பதனால்

வைதிக வழியென்றும்
வழிவழியான தொன்மையென்றும்
பழமையை தொடராது

எளிய நிகழ்வாய்
எவர் காலிலும் வீழாது
எதிர்காலம் தொடங்கு

தந்தை மடியிலமர்ந்து
தாரை வார்த்து
தந்த கன்னியனாலும்

மணமக்கள் சந்திக்காமல்
நிக்காஹ் நிறைந்ததாய்
ஜமாத் அறிவித்தாலும்

மோதிரம் மாற்றி
முத்தமிட்டு வாழ்வை
வித்திட்டுக் கொண்டாலும்

அருமைக்காரர்
அந்தணன், சாத்தாணி
வள்ளுவன், சைவக் குருக்கள்

நாவிதர், அம்பட்டர்
நாட்டாண்மைகாரர்
நடத்தி வைத்தாலும்

இருவர் இணையும்
இல்லற விழாவன்று – இணைவை

இவ்வுல மேற்கும் விழா

வியாழன், மே 8

கட்சி எதிர்கட்சி




கட்சி எதிர்கட்சி
காவியும் காங்கிரசும்
ஒரே க(கா)ட்சி
ஆனா வேறமூஞ்சி

டாட்டா, பிர்லா
கேட்டா கொடுத்தான்
வேதாந்தா, வீடியோகான்
வேண்டியா கொடுத்தான்

மிட்டல், "எல்" அன்ட் "டி"
ஐடிசியும் கொடுத்தான்
அம்பானி ஏன் - அந்த
பட்டியலில் மறைந்தான்

அடிமட்டத் தொண்டன்
அறிவானா அம்பானி
அனைத்துக் கட்சிக்கும்
அட்சயப் பாத்திரமென

எந்த முதலாளியும்
இல்லை என்பதில்லை
எக்கட்சி ஆயினும்
ஏமாற்றுவதும் இல்லை

எனக்கு மட்டும்தான்
”எஜமான்” படியளக்கனுமின்னு
எந்தக் கட்சிக்காரனும்
”எஸ்மா” சட்டமியற்றுவானா

சரிபாதி கொடுத்து
சனநாயகம் காத்தனரா
நாலுபேருக்கு நாலுதுண்டிட்டு
நாய்சண்டையை தடுத்தனரா

"டாடி" ஆட்சி
"லேடி" ஆட்சி
"மிடாஸ்" ஆட்சி - அட
அதுதான் ஒட்டுக் கட்சி

நிலக்கரி,  நியாம்கிரி மலை
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள்
இப்படி  எதுவுமில்லையெனில்
வரித் தள்ளுபடிகள்

இயற்கை வளமெல்லாம்
இவர்களை வளமாக்குது
இதனைக் கேட்டால் - இந்திய
இறையாண்மை தீவிரவாதியாக்குது

மக்கள் சொத்தெல்லாம்
மகேசன் சொத்தானது
தடங்கல் என்றாலோ - அரசு
பீரங்கியால் தாக்குது

வாங்கிய கூலிக்கு
வட்டியும் முதலுமா
வாரி வழங்கி - தன்
வாலை ஆட்டிட்டான்

சனநாயக கடமையாற்றி
சந்தோஷப் படுவோமா
இனியொரு விதி செய்திட
வினையொன்று ஆற்றுவோமா








வியாழன், ஏப்ரல் 24

மகாத்மாவும் கோலி சோடாவும்




ஆச்சி மெஸ்
அரிஜன்
அடையாளங்கள்

ஏதுமற்றவர்கள்
உழைப்பால் உருவாக்கிய
உன்னத அடையாளம்

ஊரை விட்டு
ஒதுக்கி வைத்தவனுக்கு
உத்தமரிட்ட பெயர்

சேரி மக்கள்
அரியின் குழந்தையென
ஆரிவன் சொல்வது

அரிக்கு பிறக்காமல்
பரிக்கு பிறந்தவனா
பார்ப்பன பனியாக்கள்

சாதி மதமறியாது
சந்தித்த மனிதர்கள்
சாதித்து காட்டியது

இச்சாதி இவனெனவும்
இவன் கீழோனெனவும்
எடுத்தியம்புவது

அரி இல்லையென
அவன் அறியாததால்
அரிஜன் ஆக்கப்பட்டான்

தனிக்குவளை தனித்தொகுதியென
தனித்திராதே!!  தயாராகு......
தவறானதை சரிசெய்திட




வியாழன், ஏப்ரல் 17

தமிழ். தமிழா



ஜப்பான் காரன்
சரக்கு விக்க
சட்டென படிக்கிறான்
தமிழை படிக்கிறான்

வடக்கிருந்து
வந்த நடிகை கூட
வாழ்வளித்த தமிழென
அழகாய் சொல்கிறாள்

நோக்கியா, பிளாக் பெரி
சாம்சங், சோனி
அத்தனை கைபேசியும்
தமிழில் தட்டச்சிட

குகூள், யாகூ
விக்சனரி என
விரியும் தமிழை
வெறுப்பாயா தமிழா

இனத்தில் தமிழனாய்
இங்கிலிஷ்ஷில் பேசி
இனியதமிழ் தெரியாதென
சிரிப்பாயா?.... சிந்தி






வெள்ளி, ஏப்ரல் 11

NONE OF THE ABOVE - “நோட்டா”



ஓட்டு யாருக்கு மில்லையென
ஒவ்வொருவரும் சொன்னால்
ஒரு மாற்றம் வருமா!
உலகம் விழிப்புறுமா?

ஓட்டுரிமை உனது
ஜனநாயக கடமையெனில்
ஊழலும் மதவெறியும்
உனது பங்கில்லையா?

“நோட்டா” பெரும்பான்மையானால்
ஜனநாயகம் என்ன செய்யுமென
கனா காண்கிறேன்
வினா எழுப்புகிறேன்

மோடி அலையோ
ஊழல் அலையோ
தேர்தல் விழாவில்
“நோட்டா” சரியோ?

எரியும் கொள்ளியில்
இனியும் தேடாதே
“நோட்டா” சரியெனில்
ஒட்டே போடாதே

கொள்ளை அடிக்க
கூட்டணி அமைக்குறான்
எண்ணிக்கை குறைந்தா
எதிரணியை உடைக்கிறான்

ஜனநாயம் இதுவென்றால்
சரித்திரம் மன்னிக்காது
பணம்பதவிதான் நடுநாயகம்
ஆக ஓட்டுப் போடாதே

இராம ஜென்ம பூமியும்
சேது சமுத்திர திட்டமும்
ஓட்டால் வருமா
“நோட்டா”வால் மாறுமா

டாலரும் பெட்ரோலும்
நாற்பதுக்கு வருமா
ஒட்டோ “நோட்டா”
போடும்முன் யோசி

திமுக அதிமுக
காங்கிரஸ் கம்யூனிஸ்டு
“நோட்டா”வால் ஒன்றாகுமா
ஓட்டால் பிரிபடுமா

வல்லரசு இந்தியாவை
கேப்டன் ஆள்வாரா
“நோட்டா” அமெரிக்காவை
அடிபணிய வைக்குமா

வால்மார்ட் வோடோபோன்
பெப்சி, கோக்கோ கோலா
போகுமா ஊரை விட்டு
போட்டுப் பாரு “நோட்டா”

பதினாறாவது தேர்தலில்
பதவிக்கு லாயக்கில்லையென
பம்மாத்து காட்டிடவே
“நோட்டா” ஜனநாயகமென்கிறான்

மூஞ்சி வேணா மாறும்
முடை நாற்றம் நாறும்
இதை ஓட்டோ “நோட்டா”
மாற்றுமா? யோசிச்சு பாரு

மாற்ற நினைத்தால்
மாற வேண்டியது நீ
மாற்று அரசியலை
மார்க்ஸின் வழி யோசி


தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...